Saturday 22 June 2013

யஞ்ய நாராயணன் பரத நாட்டிய அரங்கேற்றம்



பரதமென்ப தாண்டவம் மனதைக்கொய்யும் தாண்டவம்
சிறந்தநான்கு வேதம்வந்த ஐந்துமான வேதமாம்
உருத்துமூழின் தொல்லைகொய்ய கருத்திலான்மம் விளங்கச்செய்ய
எருதமர்ந்த சிவபதம் தினமும்செய்யும் அற்புதம்


“பரதம் என்பது தெய்வத்வமாகும் தெய்வ தத்வமாகும். மனத்தைக் கொய்யும் இறை தாண்டவமாகும். ஐந்தாவது வேதமாகக் கருதப்படும் பரதக் கலையானது, நம் ஊழ்வினை களைய, நம் மனத்தில் ஆன்மஒளி விளங்கச் செய்ய, சிவபெருமான் தினமும் நிகழ்த்தும் அற்புதமாகும்”

பரத மகரிஷியின் நாட்டிய சாஸ்திரமான வேதத்திற்கொப்பாகக் கருதப்படும் பரதம் ஐந்தாவது வேதமாகவே கருதப்படுகிறது.

நாட்டியத்தின் நான்கு அங்கங்களான பதம்,அபிநயம்,இசை,ரசம் ஆகியவை முறையே ரிக்,யஜுர்,சாம, அதர்வண வேதங்களிலிருந்து பிறந்தவை ஆகும். பரதம் என்ற சொல்லே பாவம்,ராகம்,தாளம் என்ற பொருள் படவே அமைந்துள்ளது.

  அங்க அசைவுகளின் பாற்பட்டதோ, அங்க நிலையின் (POSE) பாற்பட்டதோ, கேளிக்கையின் பாற்பட்டதோ மட்டுமல்ல பரதம். அது ஆழமான ஆன்மீக உணர்வுகளை வெளிக்கொணரும் சிறந்த தவமுமேயாகும். பரதத்தின் நாயகனாம் சிவபெருமான் ஊழித்தாண்டவமாடி நம் அறியாமையை போக்குவதே இதன் மேன்மைக்கு ஒரு சாட்சியாகும். பரதம் வேறு, இறைமை வேறு அல்ல.

பரதத்தின் ஒவ்வொரு அங்கமும் அசைவும் இறை சேர்க்கையை நோக்கமாய்க் கொண்டு அமைக்கப் பட்டது என்பதே உண்மை.

இது மிகச் சிறந்த ஒரு ஆன்மீக சாதனையே ஆகும்.

அரங்கேற்றம் என்பது இறைதேடலின் ஆன்மீக சாதனையின் முதல்படி என்றே கொள்ளலாம்.

அலாரிப்பு: இந்த சொல்லின் பொருள் , மலர் மொட்டு என்பதாகும். உடலும் மனமும் இறை கருணைக்கு மலர்வதையே குருக்கிறது.

கௌத்வம்: இறை சந்நிதியில் ஆடும் நாட்டியமான இது, முக்திக்கு இறைவனின் கருணையை வேண்டுவதாகவே அமைகிறது.

கணபதி வந்தனம்: இக வாழ்வின் தடங்கல்களைப் போக்க வேண்டலன்றி இறைதேடலில் தடைநீக்கம் கோரும் தவமாகவே இது அமைகிறது.

புஷ்பாஞ்சலி: மலர்களால் அர்ச்சித்து இறைவனை வேண்டும் இந்த நாட்டியம் ,அன்பு என்னும் மலர்களால் இதயத்தில் இறைவனை அருச்சித்து , அறியாமை நோய் போக்க வேண்டி நடத்தும் ஆன்ம முயற்சி.

ஜதிஸ்வரம்: ஜதிக்கு (தாளத்துக்கு) ஏற்றாற்போல் ஆடும் இந்த ஆட்டம் , மனதை அமைதிப்படுத்தி, இறைவனின் தாளத்தை உள்ளே கேட்டு அதற்கேற்றாற்போல் வாழ்வை அமைத்து இறை ஐக்யத்திற்குத் தயார்ப் படுத்தும் சாதனையாகும்.

சப்தம்: இது பாட்டு சப்தத்திற்கேற்றாற்போல் ஆடுவது மட்டுமல்ல , சித்தத்தை ஓம் என்னும் ப்ரணவ சப்தத்தை கேட்க தயார்ப் படுத்தும் ஆன்மீக சாதனை ஆகும்.

வர்ணம்: நாட்டியத்தின் நடுநாயகமான இந்த பகுதி , அழகும் நெளிவு சுளிவுகளும் நிறைந்த அங்க அசைவுகளின் மூலமாக காதலி தன் அன்பை வெளிப்படுத்துவதாக அமைகிறது. பரமாத்மாவுக்கு ஏங்கும் ஜீவாத்மாவின் அன்பு ஊடலின் வெளிப்பாடாகவே இது அமைகிறது.

பதம்: இந்த பகுதி காதலி, தன் காதலின் பிரிவு அல்லது சேர்க்கையின் வெளிப்பாட்டை பேசுவதாக அமையும். இது ஜீவ-பரம ஆத்ம தத்துவத்தை வெளிப்படுத்தவில்லையா?

ஜாவளி: நாயக(பரமாத்மா) நாயகி(ஜீவாத்மா) பாவத்தில் அமைகிறது இந்த பகுதி

இவ்வாறாக , தன் ஒவ்வொரு அங்கமும் ஜீவாத்மாவின் ஆன்ம சாதனையாகவே கொண்ட பரதம் முடிவுறும் அங்கமான,

தில்லானா: ஜீவாத்மாவின் அதிவேக அதியானந்த பரமாத்ம சேர்க்கையைக் குறிக்கிறது.

இவ்வாறாக பரதத்தின் சாரமாக வெளிப்படுவது ஆன்ம சாதனையே ஆகும்.

ஆம்..! நடராஜ தத்வத்தில் ஜீவ தத்வம் இணையப் புரியும் ஆன்மத் தவமே நர்த்தனம்.

இத்தகைய உயர்ந்த ஆன்ம வழிபாட்டின் வழிகாட்டுதலை விட மேலாக ஒரு பிள்ளைக்கு தாய் தந்தையாரோ குருவோ எதை செய்துவிட முடியும்?.
திரு & திருமதி தனபாலன் தம்பதியரின் இந்த முயற்சி பாராட்டுதலுக்கும் பெருமைக்கும் உரியதாகும்.

குருர் பிரம்மா குருர் விஷ்ணு குருதேவோ மஹேச்வரஹா
குருர்ஏவ பரப்ரம்மா தஸ்மைஸ்ரீ குரவே நமஹ ||


பரதத்தின் மூலமாக நாட்டிய-குரு, சிஷ்யனை பரம-குருவிடம்(இறைவன்) இட்டுச்செல்வதால், குருவானவர் கடவுளுக்கு நிகரான ஸ்தானத்தில் வைக்கப் படுகிறார். இறைவனே குருவடிவில் தோன்றி வழிப்படுத்துவதாகவே கருதப்படுகிறது.

ஒவ்வொரு அரங்க ப்ரவேசமும் , குருவுக்கு ப்ரசவம் போலவே ஆகும். அவர் ஒரு தாய் எல்லா இடர்களையும் வலிகளையும் சந்தித்து, அழகான குழந்தையைப் பெற்றெடுப்பது போல் எந்த சிரமத்தையும் பொருட்படுத்தாமல் முயற்சியை மேற்கொள்கிறார்.

அது போன்ற ஒருமுயற்சியை இந்த நாட்டியத்திலும், அதன் சிறப்பினால், நம்மால் உணர முடிகிறது.

இவ்வளவு அற்புதமான நிகழ்ச்சியை வடிவமைத்து யஞ்யநாராயணனைத் தயார்ப் படுத்திய குரு  மிகுந்த பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர் ஆகிறார்.

செல்வன் யஞ்ய நாராயணன் தன் திறமும் அழகும் மிகுந்த அங்க அசைவுகளினாலும் அபிநயத்தினாலும் நம் இதயத்தை கொள்ளை கொண்டான் என்றால் அது மிகையாகாது. ஆண்டவன் அருள், செல்வன் யஞ்ய நாராயணனுக்கு பரிபூரணமாய்க் கிடைக்க ஆண்டவனை நான் பிரார்த்திக்கிறேன்.

 A few Photos here...